நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர். விசாரணையை டிசம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைப்பு.

நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர் | நீதித்துறையின் மாண்பை கெடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து முறையிட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் குறித்து பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டு, அதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து நீதிபதியின் கவனத்துக்கு வக்கீல்கள் சிலர் கொண்டு வந்தனர். இதையடுத்து, நீதிபதிகளையும், நீதித்துறையையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாயவன், பக்தவச்சலம், கோவிந்தன், சொர்ணலதா ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். நீதித்துறையின் மாண்பை கெடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தாங்கள் செயல்படவில்லை என்றும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினார்கள். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, 'நீதிபதி, நீதித்துறையை தவறாக விமர்சனம் செய்தவர்கள் மீது துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று நீதிபதியிடம் கூறினார். 'நீதித்துறையை விமர்சனம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டால், அதுவே மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும். எனவே இந்த வழக்கில் ஒரு முடிவு எடுக்கும் வரை தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடக்கூடாது' என்று வக்கீல் செந்தில்குமார் என்பவர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அவசர கதியில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று கூறினார். பின்னர் விசாரணையை டிசம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Comments