ரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துகள் கண்காணிக்கப்படும் மத்திய நேரடி வரி ஆணையம் அறிவிப்பு

ரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துகள் கண்காணிக்கப்படும் மத்திய நேரடி வரி ஆணையம் அறிவிப்பு | பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின்படி ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்குவது கண்காணிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்த்ரா, ``சட்டவிரோதமாக சொத்துகள் வாங்குபவர்கள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில், ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துகளை பதிவு செய்பவர்கள் வரி செலுத்திய விவரங்கள் கண்காணிக்கப்படும்'' என்றார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சந்த்ரா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கணக்கில் வராத பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக தொடங்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களின் பதிவுகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நிறுவனங்கள் மற்றும் இவற்றின் நிறுவனர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் குறித்து வரித்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனங்களின் 621 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம். பினாமி பரிவர்த்தனை சட்டத்தின்படி இவர்களின் ரூ.1,800 கோடி சொத்துகள் குறித்து விசாரணை செய்து வருகிறோம். கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவும் அனைத்து வழிமுறைகளையும் கண்டுபிடித்து அழித்து வருகிறோம். இதனடிப்படையில்தான் போலி நிறுவனங்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்களில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்தும் சோதனை செய்ய உள்ளோம். பினாமி பரிவர்த்தனைச் சட்டத்தின்படி இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளோம். அவர்களது வரித் தாக்கல் விவரங்களில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை அல்லது விவரங்கள் பொருந்தவில்லை என்றாலோ பினாமி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பினாமி சொத்து வழக்குகளில் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு வரி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். வரி நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் பினாமி தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 24 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் எங்களுக்கு விவரங்கள் கிடைத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் எங்களது அடுத்த கட்ட முயற்சிகள் இருக்கும். சமீபத்தில் தடைச் செய்யப்பட்ட நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை வரித்துறை அதிகாரிகள் ஒப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்கள் பினாமி சொத்துகளை கையாண்டது அல்லது பிற நிதி பரிவர்தனைகளை மேற்கொண்டது வரித்துறை விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பது உறுதியானது என்றும் கூறினார். பினாமி பரிவர்த்தனைச் சட்டம் 1998-ன் படி, சட்ட விரோத பரிவர்த்தனைகள் உறுதி செய்யப்பட்டால் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். த ிருத்தம் செய்யப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்படி ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. -பிடிஐ

Comments