செல்போன் எண்ணை மாற்றி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12.75 லட்சம் திருட்டு கைவரிசை காட்டிய வடமாநிலத்தவர்கள் தலைமறைவு

செல்போன் எண்ணை மாற்றி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12.75 லட்சம் திருட்டு கைவரிசை காட்டிய வடமாநிலத்தவர்கள் தலைமறைவு | என்ஜிஒ காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 31-ல் இவரது செல்போன் எண்ணை முடக்கி, வடமாநில இளைஞரின் பெயரில் ரூ.12.75 லட்சத்தை வங்கிக் கணக்கில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். செல்போன் நிறுவனம், வங்கி நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் கொள்ளை நடந்துள்ளதாக ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆறுமுகம் கூறியதாவது: பொறியியல் நிறுவனம் என்பதால் 10 தொலைபேசி எண்களை வரிசையாய் வாங்கி பயன்படுத்துகிறோம். அதில் ஒரு எண்ணை வைத்து மோசடி செய்துள்ளனர். ஜூலை 29-ம் தேதி நிறுவனத்தின் மெயில் சேவை முடக்கப்பட்டு, அதிலிருந்த நிறுவனத்தின் லெட்டர்பேடு, பாஸ்போர்ட், பான் அட்டை தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் ஸ்டாம்ப் முத்திரையை பயன்படுத்தி காந்திபுரத்தில் உள்ள செல்போன் நிறுவனத்தில் போலி கடிதம் கொடுத்து, எனது செல்போன் எண்ணை தனூஷ் சிங் என்பவரது எண் எனவும், அது தொலைந்துவிட்டதாகவும் கூறி அந்த எண்ணை முடக்கிவிட்டு, அதே எண்ணில் வேறு சிம் கார்டு பெற்றுள்ளனர். அந்த நிறுவனமும் விசாரிக்காமலேயே சிம்கார்டு கொடுத்துள்ளது. எனது சிம்கார்டு இயங்காததால் மறுநாள் நேரில் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. எனது சிம்கார்டு இயங்காத நேரத்தில், இணைய வழி வங்கி சேவை மூலம் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12.75 லட்சத்தை லக்னோவில் ஒருவருக்கும், டெல்லியில் உள்ள ஒருவரது கணக்குக்கும் மாற்றியுள்ளனர். தகவலறிந்ததும் உடனே வங்கிக் கிளைக்கு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் மிகத் தாமதமாகவே மற்ற கிளைகளுக்கு எச்சரித்தனர். அதற்குள்ளாக அந்த பணத்தை வெவ்வேறு இடங்களில் 10 கணக்குகளுக்கு மாற்றி வெளியே எடுத்துவிட்டனர். இது திட்டமிட்ட கொள்ளையாக இருக்கிறது. செல்போன் நிறுவனம், வங்கி நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே கொள்ளை எளிதாகியிருக்கிறது. இதுகுறித்து வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த புகாரை வழக்காக பதிவு செய்து விசாரித்து வரும் குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, 'செல்போன் நிறுவனத்தில் சிசிடிவி பதிவு இல்லாததால், போலி சிம்கார்டு வாங்கியவர்கள் யார் என்பது தெரியவில்லை. வங்கிக் கணக்குகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய முயன்று வருகிறோம். மோசடி மற்றும் தொழில்நுட்ப குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இமெயில் பாஸ்வேர்டுகளையும், வங்கிக் கணக்கு பாஸ் வேர்டுகளையும் அடிக்கடி மாற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

Comments