பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறை கிடையாது பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறை கிடையாது பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு | பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை: 2017-2018-ம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர் களுக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு பாடத்திலும் 10 சதவீத மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கலாம் என்றும் ஏற்கெனவே ஆணையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கற்றலுக்கு மாணவர்களின் வருகைப்பதிவு முக்கியம் என்பதால் வருகைப்பதிவு, உள்நிலைத்தேர்வு, செயல்திட்டம் (புராஜெக்ட்), களப்பயணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆணை வெளியிடப்பட்டது. எனினும் இந்த நடைமுறையானது பள்ளியில் படித்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேல்நிலைத் தேர்வு எழுதும் தனித்தேர்வர் களுக்கு அகமதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு வழங்கலாம் என்றும் அதற்கு அரசின் ஆணை வழங்குமாறும் அரசு தேர்வுகள் இயக்குநர் கோரியுள்ளார். அவரது கருத்துரு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகளில் மதிப்பெண் வழங்க ஆணையிடப்படுகிறது. நேரடி தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக தனித்தேர்வர்கள் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு வழங்கலாம். அவ்வாறு வழங்கும்போது தசமமாக இருந்தால் அந்த மதிப்பெண்ணை அடுத்த முழு எண்ணுக்கு மாற்றலாம். மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி அடைய நேரடி தனித்தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் எழுத்துத்தேர்வில் 100-க்கு 35 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த வழிமுறை 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Comments