அனைவருக்கும் விரைவாக சிகிச்சை கிடைக்க மருத்துவக் கல்வி பாடங்களில் உயிர் நெறிமுறைகள் சேர்ப்பு துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்

அனைவருக்கும் விரைவாக சிகிச்சை கிடைக்க மருத்துவக் கல்வி பாடங்களில் உயிர் நெறிமுறைகள் சேர்ப்பு துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல் | அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை விரைவாக கிடைக்க மருத்துவப் படிப்பு பாடங்களில் உயிர் நெறிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார். சர்வதேச அமைப்பான யுனஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் அக்டோபர் 19-ம் தேதி 'உலக உயிர் நெறிமுறை நாள்' கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தனது இணைப்புக் கல்லூரிகளில் சமத்துவம், நீதி, சமபங்கு ஆகிய தலைப்புகளில் பல்வேறு போட்டிகளை நடத்துமாறு தெரிவித்திருந்தது. பல்வேறு போட்டிகள் அதன்படி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய கல்லூரிகளில் குறும்படங்கள், விழிப்புணர்வு சுவரொட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு பரிசு, ஊக்கத் தொகைகளை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி வழங்கினார். தரமான மருத்துவ சேவை தரமான மருத்துவ சேவை நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயன் தரும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் உயிர் நெறிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை விரைவாக கிடைக்க வழிவகை ஏற்படும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் டி.பாலசுப்பிரமணியன், துறை தலைவர் மினிஜேக்கப், பேராசிரியர் சிவசங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments