பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டத்தை கொண்டுவர அதிமுக அரசு முயற்சி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டத்தை கொண்டுவர அதிமுக அரசு முயற்சி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | தமிழக அரசுப் பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டத்தை கொண்டுவர அதிமுக அரசு முயற்சித்து வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என நினைக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சியை திமுக தொடர்ந்து முறியடித்து வருகிறது. தாய்மொழி மீது பற்றுகொண்ட மற்ற இயக்கங்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் என மாநிலத்தின் கல்வி உரிமையை மொத்தமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று அதன் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது பாஜக அரசின் கொள்கையாக உ ள்ளது. இதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் பாஜக அரசு சொல்வதற்கெல்லாம் அதிமுக அரசு தலையாட்டி வருகிறது. சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, இந்தி மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு என இந்தித் திணிப்புக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டிய அதிமுக அரசு, வரும் 2018-19ம் கல்வியாண்டில் மும்மொழி பாடத் திட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் வழங்கியுள்ள மும்மொழி பாடத் திட்ட ஆலோசனைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் தந்து இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் இந்தித் திணிப்புக்கு ஆதரவாக உள்ளன. அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை நிலைநிறுத்தி, இந்தி மொழி ஆதிக்கத்துக்கு தடை போட்ட அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் ஆட்சியாளர்கள், இந்தித் திணிப்புக்கு வரவேற்பு அளிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுக எந்த மொழிக்கும் எதிரான கட்சியல்ல. ஆனால், தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பிற மொழிகளின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் எதிர்ப்போம். அரசுப் பள்ளிகள் மூலம் இந்தியை திணிக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்க்காமல், தாய்மொழியை அடகுவைத்து, இந்தி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments