அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் தலை சேகரிப்பு நிரந்தர கண்காட்சிக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு

அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் தலை சேகரிப்பு நிரந்தர கண்காட்சிக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு | 2 மாதத்தில் 8,830 பேர் பார்த்து ரசித்தனர் | சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நிரந்தர தபால் தலை சேகரிப்பு கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவிகள். (கோப்புப் படம்) அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நிரந்தர தபால் தலை சேகரிப்பு கண்காட்சிக்கு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதத் தில் மட்டும் 8,830 பள்ளி மாணவர்கள் இக்கண்காட்சியைக் கண்டு ரசித்துள்ளனர். சென்னை அண்ணாசாலை யில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் 1900-ம் ஆண்டு வார்னிக் மேஜர், ரெஜினால்டு ஹயர் ஆகியோ ரால் தென்னிந்தியாவின் முதல் எலக்ட்ரிக் தியேட்டர் கட்டப்பட்டது. 1951-ம் ஆண்டு அஞ்சல்துறை இந்தத் தியேட்டரை கையகப்படுத்தியதை அடுத்து அங்கு தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது 2 முறை நடத்தப்பட்டு வந்த இந்தக் கண்காட்சி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நிரந்தரக் கண்காட்சி யாக தொடங்கப்பட்டது. இக்கண்காட்சிக்கு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் 'தி இந்து'விடம் கூறியதாவது: தபால் தலைகளை சேகரிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அஞ்சல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 1998-ம் ஆண்டு தபால் தலை சேகரிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. சென்னை நகரில் மட்டும் 3,650 பேர் தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ளனர். அஞ்சல் துறை சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நிரந்தர தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆக.15-ம் தேதி முதல் நிரந்தர கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கண்காட்சிக்கு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 42 பள்ளிகளைச் சேர்ந்த 8,830 மாணவர்கள் இக்கண்காட்சியைக் கண்டு ரசித்துள்ளனர். தபால் தலை சேகரிப்பவர்கள் 2 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளி களுக்குச் சென்று மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தபால் தலை சேகரிப்பின் அவசி யம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு கருத்தின் அடிப்படையில் 7,000 தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்படும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 10 - மாலை 6 மணி) நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்களும் இலவசமாகப் பார்வையிடலாம் என்றார்.

Comments