வங்கி சேமிப்புக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்ட அறிவிப்பு

வங்கி சேமிப்புக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்ட அறிவிப்பு | வங்கிகளில் நிர்வகிக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) அளிக்கப்பட்ட விளக்கத்தில் வங்கிகளின் சேமிப்புக் கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் ஊடகங்களில் வெளியானது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்நியச் செலாவணி தடுப்புச் சட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அராசணை ஜூன் 1, 2017-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த சட்ட அமலாக்கம் கட்டாயமாகும். இதனால் வங்கிகள் எவ்வித கூடுதல் தகவலுக்காகக் காத்திருக்காமல் ஆதார் இணைப்பை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என அரசு தெரிவித்திருந்தது. அதேபோல ரூ.50 ஆயிரத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் குறிப்பிட வேண்டும் என தெரிவித்திருந்தது. ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது கிளையில் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். யுஐடிஏஐ வழங்கிய அடையாள எண் விவரத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது தொடர்பாக ஊடகங்களில் ஆர்டிஐ-க்கு அளித்த விளக்கங்கள் செய்தியாக வெளியாயின. அதில் வங்கிக் கணக்குகளுக்கு ஆதார் இணைப்பு அவசியம் அல்ல என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தனி நபர்கள் சில பல நிரந்தர கணக்கு எண்களை (பான்) வைத்திருப்பதால் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் இனி ஆதார் அடையாள எண் இணைப்பது கட்டாயம் என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், அந்நியச் செலாவணி தடுப்புச் சட்டம் விதி 2005 திருத்தப்பட்டு அதில் பான் எண்ணுடன் ஆதார் எண் அவசியம் இணைப்பதற்கு வசதியாக படிவம் 60-ஐ தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், கூட்டாளி நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments