மத்திய அரசு அதிகாரிகளுக்கு சீருடைப்படி உயர்வு

மத்திய அரசு அதிகாரிகளுக்கு சீருடைப்படி உயர்வு | 7-வது மத்திய ஊதியக் குழு பணியாளர்களுக்கான சீருடைப் படியை உயர்த்துமாறு பரிந்துரை செய்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்டு மத்திய நிதித்துறை அமைச்சகம் சீருடைப் படியை அதிகரித்து நேற்று உத்தரவிட்டது. அதன்படி பிரதமர், முன்னாள் பிரதமர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு படையினருக்கு படி இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. முன்பு ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் சீருடைப் படி பெற்று வந்த இவர்கள் இனி இரண்டு மடங்கு தொகையை பெறுவார்கள். அதன்படி சிறப்பு பாதுகாப்பு படையின் செயல்பாட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.27,800. இப்பிரிவில் உள்ள மற்றவர்களுக்கு இந்த தொகை ஆண்டுக்கு ரூ.21,225 ஆகும். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை, மத்திய ஆயுதப்படை போலீஸ், மத்திய போலீஸ் அமைப்புகள், கடலோர காவல்படை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் படியாக கிடைக்கும். இதேபோல் தூதரக, அன்னிய சேவை பணி, சுங்க, சட்டத்துறை, ரெயில்வே அதிகாரிகள், செவிலியர்கள் ஆகியோருக்கும் கணிசமாக படி உயர்த்தப்பட்டு இருக்கிறது. சீருடைப் படிக்கான தொகை ஆண்டுக்கு ஒரு முறை ஜூலை மாதத்தில் ஊழியர்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் இந்த உத்தரவு 2017 ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Comments