வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராயலசீமா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி காஞ்சிபுரத்தில் 8 செமீ, கேளம்பாக்கம், போளூரில் தலா 7 செமீ, செங்கல்பட்டு, திருவையாறில் 5 செமீ, எண்ணூர், திருத்தணி, ஆரணி, திருத்துறைப்பூண்டியில் 4 செமீ, வந்தவாசி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பள்ளிப்பட்டு, குடியாத்தத்தில் தலா 3 செமீ, தேவலா, அரக்கோணம், பெருங்கலூர், சென்னை டிஜிபி அலுவலகம், பேச்சிப்பாறை, பெரியாறு, ஓசூர், காவேரிப்பாக்கம், உதகமண்டலம், திருமயத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சமாக பாளையங்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments