ஹாலிவுட் 3-டி திரைப்படங்களுக்கு சளைத்தது அல்ல ‘2.0’ படம் நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்


ஹாலிவுட் 3-டி திரைப்படங்களுக்கு சளைத்தது அல்ல '2.0' படம் நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம் | முழுக்க 3-டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் எந்த ஒரு 3-டி ஹாலிவுட் படத்துக்கும் சளைத்தது அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் '2.0' பட உருவாக்க காட்சிகளின் இரண்டாம் பாகம் 3-டி பரிமாணத்தில் வெளியானது. இதில் ரஜினிகாந்த் பேசும்போது, ''இயக்குநர் ஷங்கர் முப்பரிமாணத்தை (3-டி) மனதில் வைத்துதான் இக்கதையை எழுதியிருக்கிறார். படத்தில் நான் தோன்றும் முதல் 3-டி காட்சியை மானிட்டரில் மெய்மறந்து பார்த்தேன். அது ஒரு பிரம்மாண்ட அனுபவம். ஷங்கரை பாராட்டுகிறேன். எந்த ஒரு 3-டி பிரம்மாண்ட ஹாலிவுட் படத்துக்கும் இந்தப் படம் சளைத்து அல்ல. மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்'' என்றார். இயக்குநர் ஷங்கர் கூறும்போது, ''பார்வையாளர்களை திரைப்படத்துக்குள் பயணிக்கிற உணர்வை இப்படம் ஏற்படுத்தும். நேரடியாக 3-டியில் காட்சிப்படுத்தும்போது ஏற்படும் உணர்வு அற்புதமானது. இக்கதைக்கு தேவைப்பட்டதால் முப்பரிமாணம் மட்டுமே கொண்டு படத்தை எடுத்தோம். நிறைய ஹாலிவுட் படங்கள் 2-டியில் எடுக்கப்பட்டு 3-டிக்கு மாற்றுவார்கள். இது நேரடியாக 3-டியில் எடுக்கப்பட்ட படம்'' என்றார். படம் குறித்து நடிகர் அக்சய்குமார் கூறும்போது, ''3-டியில் வேலை பார்க்கும்போது கடினமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் திட்டமிட்டு எடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு இது புதுமையான அனுபவம்'' என்றார்.

Comments