தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.1,231 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.1,231 கோடி ஒதுக்கீடு | தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 14.9.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க, பாரத்நெட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசின் பங்கு முதலீடாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த நிறுவனத்தினை பதிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, 'பாரத் பிராட்பேன்ட் நெட்வொர்க் லிமிடெட்' நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றிற்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25.4.2017 அன்று தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் கண்ணாடி ஒளி இழை மூலம் இணைக்க ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 31.8.2017 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை, மேற்காணும் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து ரூ.1,230 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் இணைய சேவைகள், கேபிள் டி.வி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் விரைவில் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயன்அடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments