எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க விதித்த தடை உறுதி அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க விதித்த தடை உறுதி அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு | எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் அழைத்து செல்லக் கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 'சேலத்தில் செப்டம்பர் 30-ம் தேதி (நாளை) நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு மற்றும் அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்' என கோரி 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநரான பாடம் ஏ.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ''எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் அழைத்துச் செல்லக் கூடாது'' என தடை விதித்து கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டனர். இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் பி.சேகர், உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'சேலத்தில் செப்டம்பர் 30-ம் தேதி நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் காலை முதல் மதியம் வரை லைவ்-லைப் என்ற தனியார் அமைப்பு நடத்தும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சிதான் நடத்தப்படுகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் நிகழ்வு கிடையாது. இது மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான ஒரு ஊக்குவிப்பு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. எனவே, தடையை நீக்க வேண்டும்' என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை விடுமுறைகால சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''மாணவர்களுக்கு தற்கொலை போன்ற எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்'' என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''பிரிட்டன் ராணியும், பிரதமரும் வந்தாலும்கூட பள்ளி மாணவர்களை வெளியே அழைத்துச் செல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. மாணவர்களை அழைத்துச் செல்ல அரசு ஏதும் உத்தரவு பிறப்பித்துள்ளதா? இப்போதுள்ள சூழலில் விவேகானந்தரே வந்து உரை நிகழ்த்தினாலும் அவரது பேச்சைக் கேட்க 100 பேர்கூட வரமாட்டார்கள். தடையை நீக்க ஒரு மணி நேரத்தில் அவசரம் அவசரமாக பதில் மனுவை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, இதே அக்கறையை மாணவர்களின் கல்வித் தரத்திலும் காட்ட வேண்டும். முதலில் இது கல்வி சார்ந்த நிகழ்ச்சியே கிடையாது'' என கருத்து தெரிவித்து தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்தினர். மாலையில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதை நாங்கள் தவறு எனக் கூறவில்லை. அதேநேரம் அந்த நிகழ்ச்சி நடத்தப்படும் விதம் சரியாக இருக்க வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அடையாள அட்டை, சீருடை சகிதமாக அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதற்குத்தான் நாங்கள் தடை விதித்துள்ளோம். மாணவர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. ஆனால் இதே நிகழ்வுக்கு மாணவர்கள் தங்களது நண்பர்களுடனோ அல்லது பெற்றோருடனோ செல்ல இந்த உத்தரவு தடையாக இருக்காது. அதேபோல மாணவர்களுக்கு ஏதாவது போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் அவர்கள் பெற்றோருடன் பங்கேற்கலாம். அரசு விழாக்களை பள்ளி வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்களை வைத்து நடத்துவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. எனவே, தடையை நீ்க்கக்கோரி அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் வழக்கை பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைக்கிறோம்.

Comments