ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெ. மரணத்தை விசாரிக்க ஆணையம் தமிழக அரசு அமைத்து உத்தரவு

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெ. மரணத்தை விசாரிக்க ஆணையம் தமிழக அரசு அமைத்து உத்தரவு | முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அதே ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து 74 நாட்கள் அவர் சிகிச்சையில் இருந்தார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் மருத்துவமனை பிஸியோதெரபிஸ்ட்கள் ஆகியோர் அப்போலோ மருத்துவக் குழுவுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மறுநாளே எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வந்தது. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றே எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். இதற்கிடையே பிப்ரவரி 7-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றதாக தெரிவித்தார். பின்னர் சசிகலாவுக்கு எதிராக தனி அணியாக செயல்படத் தொடங்கினார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சிலர் பிரிந்து வந்தனர். இதனிடேயே பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்வு செய்தனர். அவர் பிப்ரவரி 16-ம் தேதி பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதற்காக தர்மயுத்தம் செய்வதாகவும் அறிவித்தார். இரு தரப்பும் தனித்தனி அணிகளாகவே செயல்பட்டு வந்தன. அதன்பின், டிடிவி தினகரன் - பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினகரனை சமாளிக்க ஓபிஎஸ் அணியை தங்கள் அணியுடன் இணைக்க வேண்டிய நிலை பழனிசாமிக்கு ஏற்பட்டது. அதற்காக, அவரது பிரதான கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். அதன்பின், ஆகஸ்ட் 21-ம் தேதி இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அவரது அணியில் இருந்த பாண்டியராஜனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் பழனிசாமி அணிக்கு திரும்பினார். அதன் தொடர் நடவடிக்கையாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் அக்டோபர் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். நன்றாக இருக்கிறார் என்று நாங்கள் கூறியது எல்லாம் பொய். எங்களை மன்னித்துவிடுங்கள். சசிகலா குடும்பம் சொல்லச் சொன்னதைத்தான் சொன்னோம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும்' என்றார். அவரது பேச்சால் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்தது. விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக நேற்று மாலை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இன்று (25-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்துள்ள மர்மங்கள் விலகும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments