-->

Tuesday, September 19, 2017

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு | அரசு ஊழியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125.24 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த என்.கிருபாகரன் இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்களிப்பு ஓய்வூதியம் குறித்தும், அதில் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி மற்றும் அரசு கூடுதல் பிளீடர் ப.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி நிதித்துறை (செலவின பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு அரசு ஊழியரும் தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பாக தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 31.3.17-ம் தேதி வரை இந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-17-க்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு, திடீர் மரணம், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கருவூல கணக்குத் துறை அறிக்கையின்படி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தன்பங்களிப்பு ஓய்வூதிய கணக்கை முடித்து வழங்கக்கோரி 7 ஆயிரத்து 409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என அதில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.