ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு | ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்பது அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2013-ல் 14 ஆயிரம் சாலை விபத்துகளில் 15,563 பேரும், 2014-ல் 14,165 விபத்துகளில் 15,190 பேரும், 2015-ல் 14,524 விபத்துகளில் 15,642 பேரும், 2016-ல் 16,092 விபத்துகளில் 17,218 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் ஜூலை வரை 9,231 விபத்துகளில் 9,881 பேர் மரணமடைந்துள்ளனர். ஓட்டுனரின் தவறு, பயணிகளின் தவறு, பாதசாரிகளின் தவறு, எந்திர கோளாறு, மோசமான சாலை, மோசமான வானிலை போன்ற பல காரணங்கள் விபத்துகளுக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஓட்டுனரின் தவறுதான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் பாதுகாப்புக்காக மத்திய மோட்டார் வாகன விதிகள், மாநில விதிகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த விதிகள் கொண்டுவரப்பட்டன. அவையெல்லாம் ஓட்டுனர்களின் செயல்பாட்டை நிர்வகிப்பதற்காகவும், போக்குவரத்து குற்றங்களை தடுப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டன. வாகனத்தை ஒருவருக்கு வழங்கும்போது விற்பனையாளர்கள் கண்டிப்பாக இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். வாகனத்தை வாங்கும் ஒருவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால், அவரது வாகனத்தை பதிவு அதிகாரியோ அல்லது உதவிப் பதிவு அதிகாரியோ பதிவு செய்யக்கூடாது. இந்த விதிகளைப் பற்றி அவரவர் அதிகார எல்லைக்கு உட்பட்ட டீலர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் வாகன பதிவு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments