தமிழகம், புதுவையில் பரவலாக 2 நாட்களுக்கு மழை தொடரும் உள் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகம், புதுவையில் பரவலாக 2 நாட்களுக்கு மழை தொடரும் உள் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை தொடர வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட் டங்கள் மற்றும் டெல்டா மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு நாட்களைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை தொடரக்கூடும். உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை நகரைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 177 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 146 மிமீ. ஆனால் இயல்பைவிட 21 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஜூன் 1 முதல் 261 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 34 மிமீ அதிகம் ஆகும். போளூரில் 14 செமீ மழை நேற்று காலை 8.30 மணிக்கு பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செமீ மழை பெய்துள்ளது. மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் தலா 10 செமீ, மதுரை, திருபுவனத்தில் தலா 9 செமீ, அரிமலம், கள்ளக்குறிச்சி, மேல்ஆலத்தூர், செஞ்சி, செங்கம், மயிலத்தில் 8 செமீ, புதுச்சேரி, சேத்தியாத்தோப்பு, வேலூர், மரக்காணம், பாபநாசம், பாடாலூரில் தலா 7 செமீ, பேராவூரணி, உளுந்தூர்பேட்டை, திருமயம், சாத்தனூர், திருவிடந்தையில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments