அக்டோபர் 1-ந் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு.


அக்டோபர் 1-ந் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு | அக்டோபர் 1-ந் தேதி முதல் இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு, சமையல் கியாஸ் இணைப்பு மற்றும் மானியம் பெறுவதற்கு, வருமான வரி செலுத்துவதற்கு என பல்வேறு செயல்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போது ஒருவரின் இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:- அடையாள மோசடியை தடுப்பதற்காக அக்டோபர் 1-ந் தேதி முதல் இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் தவிர இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநில மக்களுக்கும் இது பொருந்தும். அந்த 3 மாநிலங்களுக்கு தனியாக அறிவிக்கை வெளியிடப்படும். இறப்பை பதிவு செய்யும்போது இறந்தவர்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்காக ஆதார் எண் அவசியம் ஆகிறது. எனவே அக்டோபர் 1-ந் தேதி முதல் இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. இறந்த நபர்களின் உறவினர்களோ, சார்ந்தவர்களோ அல்லது நண்பர்களோ வழங்கும் விவரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்கு ஆதார் எண் பயன்படும். அடையாள மோசடியை தடுப்பதற்கான சரியான நடைமுறையாக இது விளங்கும். அதோடு இறந்த நபரின் அடையாளங்களை பதிவு செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். இறந்த நபரின் அடையாளத்தை நிரூபிப்பதற்காக பலவித ஆவணங்களை வழங்குவது இதன்மூலம் தவிர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பதிவாளர் ஜெனரல் அனைத்து மாநிலங்களுக்கும் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் நபர் இறந்த நபரின் ஆதார் எண் அல்லது சேர்க்கை அடையாள எண் (இஐடி) மற்றும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வழங்க வேண்டும். ஆனால் விண்ணப்பதாரருக்கு இறந்தவரின் ஆதார் எண் அல்லது சேர்க்கை அடையாள எண் பற்றி தெரியவில்லை என்றால், தனக்கு தெரிந்து இறந்த நபர் ஆதார் எண் பெற்றிருக்கவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தவறான தகவல் தெரிவித்தால் ஆதார் சட்டப்படியும், பிறப்பு-இறப்பு பதிவு சட்டப்படியும் அவர் குற்றவாளியாக கருதப்படுவார். இறந்தவரின் கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோர் ஆதார் எண்ணுடன் விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணும் பெறவேண்டும். அனைத்து மாநில பிறப்பு-இறப்பு தலைமை பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், ஒத்துழைக்கவும் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் ஒரு மைய ஆணையமாக செயல் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மேல்-சபையில் ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹைன் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், "இப்போதைக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் ஜனவரி 1-ந் தேதி முதல் மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு ஆதார் அட்டை மூலம் சரிபார்க்கப்படுகிறது" என்றார்.  DOWNLOAD

Comments