பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் | பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார். பாராளுமன்றத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:- மத்திய அரசு பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள நடைமுறையை எளிதாக்க உள்ளது. பாஸ்போர்ட் பெற 1989-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு உத்தரவு நடைமுறையில் இருந்தது. இனி பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக பள்ளி மாற்று சான்றிதழ், பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளித்தாலே போதும். இதன் மூலம் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் இனி பாஸ்போர்ட்டை எளிதாக பெற முடியும். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 8 வயதுக்கு குறைவானவர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தாய், தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டாலே ஏற்கப்படும். இருவரின் பெயரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தனியாக வாழும் தாய் அல்லது தந்தையின் குழந்தைக்கு பாஸ்போர்ட் பெற இது உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments