தமிழகத்திலேயே முதல்முறையாக கரூரில் ஓட்டுநர் உரிமம் வழங்க தானியங்கி தேர்வுத்தளம் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது

தமிழகத்திலேயே முதல்முறையாக கரூரில் ஓட்டுநர் உரிமம் வழங்க தானியங்கி தேர்வுத்தளம் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது | கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனம் மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளத்தை கணினிமயமாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கரூர் உள்ளிட்ட 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான கணினிமய தானியங்கி தேர்வுத்தளம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தேர்வுத்தளங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவை கணினிமயமாக்கப்படவில்லை. இந்நிலையில், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்தில் கணினிமயமாக்கும் திட்டத்தை முன்னோடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, அதை நடைமுறைப் படுத்தி பார்த்த பின்னர் மற்ற 13 இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தேர்வுத்தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்தல், மின் இணைப்பு வழங்குதல் மற்றும் கணினி மயமாக்கும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இலகு ரக வாகன(கார்) ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டிக் காட்டுவதற்கு 'ஹெச்' வடிவில் தளம் அமைக்கப்பட்டு, அந்த தளத்திலும் மேடு ஏறும் இடத்திலும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வாகனம் ஓட்டுவதைக் கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் பெறுபவர் மட்டும் தனியாக வாகனத்தை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில், ஓட்டும்போது தவறிழைத்தால் 'பீப்' ஒலி எழும்படி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் '8' வடிவத்தில் அமைக்கப்பட்ட தேர்வுத்தளத்தில் வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டும். இதைக் கண்காணிக்க ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்தபிறகு, வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 10 நிமிடங்களும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற 4 நிமிடங்களும் வாகனங்களை இயக்க அவகாசம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் வாகனத்தை இயக்குவது கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தவறிழைத்தாரா இல்லையா என்பதை சரிபார்த்து உரிமம் அளிக்கப்படும். இது, தமிழகத்தில் முதல்முறையாக முழுமையான கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளமாக செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க.சுப்ரமணியன் கூறியபோது, "ஓட்டுநர் உரிமம் வழங்கும் தேர்வுத்தளத்தை கணினிமயாக்கும் பணிகள் தனியார் பொறியியல் கல்லூரி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வரும்" என்றார். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட உள்ள தேர்வுத்தளம். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற 4 நிமிடங்கள் வாகனங்களை இயக்க அவகாசம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments