பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய படிவம் வருமான வரித்துறை அறிமுகம்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய படிவம் வருமான வரித்துறை அறிமுகம் | பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருமான வரித்துறை புதிய படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் சேவை மூலமாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வசதிகள் வருமான வரித்துறை யினரால் கொண்டுவரப்பட்டன. தற்போது ஒரு பக்கத்திலான படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் பான் எண், ஆதார் எண் என இரண்டையும் குறிப்பிட வேண்டும். மேலும் இரண்டு அட்டைகளிலும் உள்ள பெயரையே படிவத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் இந்த ஆதார் எண் வேறு எந்த பான் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்ற உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்டிருக்கும் பான் அட்டை தவிர வேறு எந்த பான் அட்டைகள் இல்லை என்ற உறுதிமொழியையும் கொடுக்க வேண்டும் என்று வரித்துறை கூறியுள்ளது. ஆதார் எண்ணை மற்ற பான் எண்ணோடு இணைக்காத வகையில் படிவத் தில் பல்வேறு செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ``இந்த படிவம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்னொரு வழிமுறையாகும். ஏற்கெனவே உள்ள ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் வழிமுறைகளும் நடைமுறையில் இருக்கும்'' என்று வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  புதிதாக பான் எண்ணுக்கு விண்ணப்பம் செய்பவர்களும் அதற்கான படிவத்தில் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும் பான் அட்டையில் ஏதாவது மாறுதல் செய்வதற்கான விண்ணப்பங்களிலும் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை குறுஞ்செய்தி மூலமாக இணைக்கலாம். அதன்படி கைபேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக இணைக்க வருமான வரித்துறையின் http://www.incometaxindiaefiling.gov.in./என்ற இணையப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் போன்ற விவரங்களை கொடுத்த பின்னர் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் வரித்துறை தகவலின்படி, பான் எண்ணுடன் இதுவரை 2.62 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 25 கோடி பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 115 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

Comments