அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு


ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு | ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டு டிசம்பர் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகைப் பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் முடிந்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், மத்திய அரசு ஊழியர்கள் பணியில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கணினி மயமாக்கலை அதிகரித்ததுடன், மத்திய அரசு ஊழி்யர்கள் அலுவலகத்துக்கு வரும் நேரத்தை முறைப்படுத்தினார். இதற்காக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 'விரல் ரேகை பதிவு'- பயோ மெட்ரிக் முறை அமலாகியது. இந்த நடவடிக்கையினால், தற்போது இணையதளம் மூலம் அரசு ஊழியர்கள் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகத்திலும் இந்த வருகைப்பதிவு மேலாண்மை இல்லை. அரசு ஊழியர்கள் காலை 9.45 முதல் 10 மணிக்குள் வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 வரை சலுகை அளிக்கப்படுகிறது. மாதம் 2 நாட்கள் தலா ஒரு மணி நேரம் 'பெர்மிஷன்' அளிக்கப்படுகிறது. காலம்தாழ்த்தி வந்தால் பெர்மிஷனில் கழித்துக் கொள்ளலாம் அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும். ஆசிரியர்களைப் பொறுத்த வரை காலை 9.20 முதல் 4.10 வரை பணி நேரம். அரசு ஊழியர்களைப் போல் மற்ற சலுகைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு. விடுப்பு விஷயத்தில் மட்டும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மாற்றம் உண்டு. ஆனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட சதவீதத் தினர் இந்த பணிநேரத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆசிரியர் கள் தினசரி காலை நேரம் தாழ்த்தி வருவது கண்டறியப்பட்டதால், பள்ளிக் கல்வித் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, தலைமையாசிரியர் தன் கைபேசியில் இருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகை நேரத்துக்குள் வந்தவர் கள் பட்டியலை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டது. ஆனால், அந்த திட்டத்தை யாரும் பின்பற்றுவதாகத் தெரிய வில்லை. அதே போல், இன்றளவும் 'லெட்ஜர்' கையெழுத்து முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. விரல் ரேகை வருகைப்பதிவு முறையை கொண்டுவர முயற்சிக்கும்போது எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலமாற்றம், நிதி நெருக்கடி ஆகியவை தமிழக அரசையும் புதிய மேலாண்மைத் திட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. கணினி மூலம் அரசு ஊழியர்கள் வருகை, ஊதியம் உள்ளிட்ட பிற சேவைகளை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது. வலைதள சம்பளப் பட்டியல் இதற்காக பிரத்யேகமான மென் பொருள் தயாரிக்கப்பட்டு, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர் கள் தற்போது வலைதள சம்பளப் பட்டியல் மென்பொருள் மூலம், அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியலை தயாரித்து வருகின்றனர். இதில், அரசு ஊழியர்கள் சம்பளம், பிற விவரங்கள், பணியில் சேர்ந்த நாள், ஓய்வுவிவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணைக் கப்படுகின்றன. இதுதவிர, நிதி மேலாண்மைப் பணிகள் சிறப்பாக நடக்க, நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மோலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது. இதைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு திட்டத்தில் இரண்டு பயன் என்ற அடிப்படையில், இத்திட்டத் தின் மூலம், அரசின் வரவு, செலவு உள்ளிட்ட விவரங்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பொதுமக் களுக்கு நிதி தொடர்பான சேவைகள் உடனடியாகக் கிடைக்கும். இத்திட்டத்தில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப்பதிவை உறுதி செய்தல் போன்ற பாது காப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப் படுகின்றன. இதில் விரல்ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. இந்த விரல் ரேகை வருகைப் பதிவை, தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்துவது சிரமம். மத்திய அரசு ஊழியர்களுக்கு திட்ட அமலாக்கப் பணிகள் இல்லை. ஆனால், மாநில வருவாய்த் துறையினர் களப்பணியில் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்கு விரல் ரேகைப் பதிவு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments