தமிழகத்தில் 82% பேர் ஹெல்மெட் அணிவதில்லை தொண்டு நிறுவன ஆய்வில் தகவல்

Image result for ஹெல்மெட்
தமிழகத்தில் 82% பேர் ஹெல்மெட் அணிவதில்லை தொண்டு நிறுவன ஆய்வில் தகவல் | தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவோரில் சுமார் 82 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். மேலும் 90 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்கின்றனர் என சிஏஜி என்ற தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் சிஏஜி தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கௌதம், சுமானா ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து ஆய்வு செய்தோம். சென்னையில் உள்ள 12 சிக்னல்கள், திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், கடலூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது பலர் போக்குவரத்து விதிகளை மீறுவது தெரியவந்தது. தற்போது நாட்டில் அதிக விபத்துகள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை யில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விபத்துகளில் இறப் போரின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பின்னணியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சென்னையில் 30 முதல் 35 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுகின்றனர். மேலும் பலர் ஹெல்மெட்டை உரியவகையில் அணிவதில்லை. பிற மாவட்டங்களில் 82 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். அதேபோல 28 முதல் 30 சதவீதம் பேர் வரை சீட் பெல்ட் அணியாமல் சென்னையில் கார் ஓட்டுகின்றனர். பிற மாவட்டங்களில் 90 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணிவதில்லை. சீட் பெல்ட் அணிவோரில் பெரும்பாலானோர் வாடகை கார் ஓட்டுநர்களே. தற்போது மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டத் திருத்தத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். மேலும் போலீஸாரும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரமாக செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் தினமும் ஏறத்தாழ 1100 வாகனங்கள் பதிவுக்காக வருகின்றன. 600 முதல் 700 பேர் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதனால் விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments