-->

Monday, July 10, 2017

வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது

வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது | வரி விலக்குக்கான பணிக்கொடை தொகையின் உச்சவரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. மத்திய அரசுக்கு 7-வது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில், வரி விலக்குக் கான பணிக்கொடையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. எனவே இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வந்தது. இதில் பணிக்கொடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனவே இது தொடர்பான திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. வருகிற 17-ந் தேதி தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனினும் இந்த மசோதா இன்னும் மந்திரி சபையின் ஒப்புதலை பெறவில்லை. இந்த மசோதா பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்துவதுடன், வருமான அதிகரிப்பு காரணிகளை அடிப்படையாக கொண்டு வரி விலக்கு பணிக்கொடை உச்சவரம்பை மாற்றியமைக்க பாராளுமன்ற வழியை தவிர்த்து நிறைவேற்றும் அதிகாரம் மூலம் சட்டதிருத்தம் மேற்கொள்ள மத்திய அரசையும் அறிவுறுத்தும். இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், 'வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை உயர்த்தும் வகையில் திருத்த மசோதா கொண்டு வருவது எங்கள் திட்டமாக உள்ளது. இது வருகிற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என்றார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முறைசார்ந்த தொழிலாளர்கள் ரூ.20 லட்சம் வரை வரி விலக்குடன் கூடிய பணிக்கொடை பெற தகுதி பெறுவர். முன்னதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, இந்த பரிந்துரைக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தன. எனினும் பணிக்கொடை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 ஊழியர்களாவது பணியாற்ற வேண்டும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பணிக்கொடை வழங்கப்படும் என்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்திய பணிக்கொடை சட்டப்படி, ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பணியாற்றினால் மட்டுமே அவர் பணிக்கொடை பெறத்தகுதி வாய்ந்தவர் ஆவார். மேலும் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்களையாவது கொண்ட நிறுவனம்தான் பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரமுடியும் என்ற நிபந்தனைகள் தற்போது அமலில் உள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.