மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் | மத்திய மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவியது. இதனால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என்று அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்றால் சென்னையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நல்ல மழை பெய்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: கடந்த 30-ம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங் கியது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக் காற்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் வரை பரவி, அப்பகுதியில் நல்ல மழையை கொடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது, தமிழகத்தையும் தாண்டி ஆந்திர மாநிலத்தை நோக்கி செல்கிறது. இந்த சூழலில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்காது. தற்போது தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் முழுவதும் பரவியதால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது. அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவக்காற்று ஆந்திராவை நோக்கி சென்றதும், மீண்டும் வெயில் கொளுத்த வாய்ப்பு உள்ளது. காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செமீ, ஆலங்காயத்தில் 9 செமீ, வானூர், செங்கத்தில் தலா 6 செமீ, மரக்காணம், போளூர், வாணியம்பாடியில் தலா 5 செமீ, பெரம்பலூர், வேலூர், சிவகங்கையில் தலா 4 செமீ, குடியாத்தம், பெரும்புதூர், செங்குன்றம், தாம்பரம், பண்ருட்டி, மதுராந்தகத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதி களில் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments