நாடு முழுவதும், 16-ந் தேதி முதல் அமல் பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம்

நாடு முழுவதும், 16-ந் தேதி முதல் அமல் பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் | நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும்முறை வரும் 16-ந் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் கள் மாற்றி அமைத்து வருகின்றன. ஆங்கில மாதத்தின் 1-ந் தேதியிலும், 16-ந் தேதியிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் நிலவி வருகிற கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதன் காரணமாக 15 நாளுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கூடவோ, குறையவோ செய்கின்றன. இந்தமுறையில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வர பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படும். இந்த முறை பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அந்தந்த நாளில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும். இந்த புதிய முறையை முதலில் நாட்டில் உள்ள 5 நகரங்களில் அறிமுகம் செய்து, சோதித்துப் பார்க்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விரும்பின. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும்முறை புதுச்சேரி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), உதய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜாம்ஷெட்பூர் (ஜார்கண்ட்), சண்டிகார் ஆகிய 5 நகரங்களில் கடந்த மே மாதம் 1-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இப்படி தினமும் இந்த 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்ததால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்தன. அதில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கிறபோது, 15 நாளின் முடிவில் ஏற்படுகிற பெரிய அளவிலான தாக்கம் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து நாடு முழு வதும் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைக்கிற முறையினை அமல்படுத்துவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுத்தன. அதன்படி வரும் 16-ந் தேதி முதல் இந்த முறை, நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

Comments