-->

Tuesday, April 11, 2017

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் | மழலையர், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது அந்த பள்ளியில் முதல் கட்ட நுழைவு வகுப்பில் நலிவடைந்தவர்கள், மறுக்கப்பட்டவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் ஆகியோர் 25 சதவீதம் இலவசமாக சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில் 2017-2018-ம் கல்வியாண்டிற்கு மாநிலம் முழுவதும் உள்ள 9 ஆயிரம் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவித் தொடக்க கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்திட உரிய வசதிகள் செய்யப்படும். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்யப்படும். அந்தந்த பள்ளியில் குறிப்பிட்ட நாளன்று நடந்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறையினரும் கண்காணிப்பர். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு, குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும். வருகிற 20-ந் தேதி முதல் மே 18-ந்தேதிவரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.