200 ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு ஜூன் மாதத்துக்கு பின்பு புழக்கத்துக்கு வருகிறது

200 ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு ஜூன் மாதத்துக்கு பின்பு புழக்கத்துக்கு வருகிறது | 200 ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த நோட்டுகள் ஜூன் மாதத்துக்கு பின்பு புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2,000-ஐ மாற்றுவதில் சிரமம் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. என்றபோதிலும், முன்பு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த அளவிற்கு புதிய ரூ.500, 2,000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இன்னும் பணப் புழக்கத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. தவிர, கடந்த மாதம் 13-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு முற்றிலுமாக தளர்த்தப்பட்ட போதிலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னொரு பக்கம் கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. புதிய 200 ரூபாய் நோட்டு இந்த நிலையை தவிர்ப்பதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. கடந்த மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடுவது குறித்த உத்தேச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் 2 உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய 200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி ஜூன் மாதத்துக்கு பிறகு தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து உடனடியாக இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் முறை ஏனென்றால், இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை அளிக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும். இந்த ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக புதிய ரூ.200 நோட்டு அச்சிடும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ரூ.200 நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு நாட்டில் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Comments