157 ஏக்கரில் இயற்கை எழில் சூழ்ந்த ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

157 ஏக்கரில் இயற்கை எழில் சூழ்ந்த ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி | சென்னையில் 157 ஏக்கரில் அரிய வகை மரங்கள், தாவரங்கள், மலர்கள், அடர்ந்த காடுகள், பாரம்பரிய கட்டிடங்களுடன்கூடிய தமிழக ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். தமிழக ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) சென்னை கிண்டி யில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக ஆளுநர் மாளிகை வளாகத்தை பொது மக்கள் கண்டுகளிக்க இன்றுமுதல் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, நபர் ஒருவருக்கு ரூ.25 வீதம் கட்டணம் செலுத்தி பார்வையிட லாம். வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. இணையதளத் தில் பதிவு செய்யும்போது எம்எம்எஸ் மூலம் தகவல் வரும். அதனையும் இ-மெயிலில் விண்ணப்பித்ததற்கான அத் தாட்சி, அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். ஆளுநர் மாளிகை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேட்டரி காரில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆளுநர் மாளிகையின் பிரம்மாண்டமான பிரதான நுழைவாயில், பிரதான புல்வெளி, மான்கள் உலவும் இடம், முதல்வர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் பதவியேற்கும் தர்பார் அரங்கம், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் தங்கும் மாளிகை, மூலிகை தோட்டம், அடர்ந்த வனப் பகுதி, லவ் பேர்ட்ஸ் பெரிய கூண்டு உட்பட 13 இடங்களைக் கண்டுகளிக்கலாம். இதுதொடர்பாக தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்பை ஆளுநர் மாளிகையில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். அப்போது ஆளுநர் மாளிகையைப் பார்த்து பொதுமக் கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அப்போதுதான் மும்பை ஆளுநர் மாளிகையையும் சுற்றுலா தலம் போல பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று யோசனை வந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மும்பை ஆளுநர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது. இதற்கு பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதுபோலவே மிகவும் அழகான தமிழக ஆளுநர் மாளிகையையும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிட திட்டமிட்டோம். அதற்கு முன்னதாக இங்கு உள்ள மரங்கள், தாவரங்கள், மலர்கள் ஆகியவற்றின் தாவரவியல் பெயர் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து எழுதி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனநாயக நாட்டில் ஆளுநர் மாளிகை பொதுச் சொத்துதான். அதனால் இதைப் பார்க்க மக்களுக்கு உரிமை உள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை வளாகத்தில் 30 முதல் 40 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒளி, ஒலிக் காட்சி அரங்கு அமைக்கப்படும். அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த வளாகத்தில் அவ்வையார் சிலை அமைக்கப்பட்டு அதன் கீழே உள்ள கல்வெட்டில் ஆத்திசூடி பாடல்கள் இடம்பெறும். அந்தப் பாடல் வரிகளில் குழந்தைகள் கை வைத்தால், அந்தப் பாடல் ஒலிக்கும். இதற்கு மலேசியா, சிங்கப்பூரில் உள்ளது போன்ற அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து இன்னும் பலவற்றுக்கும் ஏற்பாடு செய்ய உள்ளோம். நாட்டில் பொது வுடமையும், முதலாளித்துவமும் வளர்ந்த அளவுக்கு சுற்றுலா வளர்ச்சி பெறவில்லை. சிறிய நாடுகள் எல்லாம் சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளன. எனவே, நாமும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல வழிகளிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Comments