இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு | ஏழை பெண்கள் இலவச சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 5 கோடி பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அரசிதழில் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: இலவச எல்பிஜி இணைப்பு பெற விரும்புவோர், ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் இதுவரை ஆதார் எண் பெறாதவர்கள் வரும் மே 31-ம் தேதிக்குள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.  அவ்வாறு ஆதார் எண்ணுக்கு பதிவு செய்து கொண்டவர்கள், அதற்கான ஒப்புகை சீட்டின் நகலை சமர்ப்பித்து இலவச எல்பிஜி இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே எல்பிஜி இணைப்பு பெற்றவர்கள் மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுவதற்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயமாக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்கள் (14.2 கி.கி.) மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வேண்டி பதிவு செய்யும் போது, அதற்கான மானியத் தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சந்தை விலையில் சிலிண்டரை வாங்கிக்கொள்ள வேண்டும். 12 சிலிண்டருக்கு மேல் தேவைப்படுவோர் சந்தை விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

Comments