-->

Saturday, March 25, 2017

கறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை

கறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை | கறுப்புப் பணத்தை பற்றி தெரிவியுங்கள் இல்லையெனில் பின்னர் வருத்தப்படுவீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. மேலும் அனைத்து வகையான டெபாசிட் பற்றிய தகவல்கள் வருமான வரித்துறையினரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் விவரங்களையும் கறுப்புப் பணத்தையும் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இது தொடர்பான விளம்பரம் அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகியுள்ளது. கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு, கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளையாக்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக் கொள்ளலாம். மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ள மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும். இதையொட்டி வருமான வரித்துறை நாட்கள் குறைவாக இருக்கிறது. உடனே உங்களது கறுப்புப் பணத்தை பற்றிய விவரங்களை தெரிவியுங்கள் என்று எச்சரித்துள்ளது. மேலும் கறுப்பு பணத்தையும் சொத்துகளையும் ஒப்படைத்தவர்களின் விவரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று வரித்துறை கூறியுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப் பவர்கள் உடனே இந்த திட்டத்தின் கீழ் தகவலை தெரிவித்து விட வேண்டும் என்றும், இல்லையெனில் பினாமி சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தது. மேலும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி மத்திய அமலாக்கத்துறை யினரிடமும் சிபிஐ வசமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித் திருந்தது. ``ஒரு தனிமனிதரோ அல்லது நிறுவனமோ பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கறுப்பு பணத்தை ஒப்படைத்தால் அவர்களது வருமானத்தில் 49.9 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தெரிவிக்காமல் வருமான வரித்தாக்கல் செய்யும் போது கறுப்புப் பணம் பற்றிய விவரம் அளித்தால் 77.25 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும்'' என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கறுப்புப் பண விவரங்களை அறிவிக்காமல் சோதனையின் மூலம் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் வராத பணத்தை ஒப்படைத்தால் 107.25 சதவீத வரி மற்றும் அபராதமும் செலுத்த வேண்டும். சோதனையின் போது கணக்கில் வராத பணத்தை ஒப்படைக்கவிட்டால் மிக அதிக தொகை அபராதமும் 137.25 சதவீதம் வரியும் செலுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.