நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாடுகள் மேம்பாடு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவிப்பு

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாடுகள் மேம்பாடு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவிப்பு | நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாடுகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆதார் சேர்க்கை பணிகள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழகம் முழுவதும் 339 இடங்களில் 367 முகப்புகளுடன் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்களில் ஆதார் சேர்க்கைக்கு தேவையான படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டு பொதுமக்களின் கருவிழி மற்றும் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு ஆதார் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை நிர்வகித்து வருகிறது. சமீபகாலமாக, சென்னை பெருநகர பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இயங்கும் இடங்கள் பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், ஆதார் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை தீர்த்துவைப்பதற்கும் பிரத்தியேகமாக அலுவலர்கள் இல்லை என்பது போன்ற புகார்கள் தெரிவிக்கப்படுவதால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாட்டு வழிமுறைகள் 13-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளன. தலைமைச் செயலகம், எழிலகம், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் (ரிப்பன் மாளிகை), மண்டல அலுவலகங்களான திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டல அலுவலகங்கள், சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களான அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மைலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படும். என்னென்ன மேம்பாடு? நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் காலை 9.45 முதல் மாலை 5.45 வரை செயல்படும். இந்த நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் உதவி மேஜைகள் அமைக்கப்பட்டு ஆதார் உதவி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஆதார் சேர்க்கைக்கு தேவையான படிவங்களைப் பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்குவார்கள். மேலும், "முதலில் வருபவருக்கு முதல் சேவை" என்ற அடிப்படையில் வரிசை எண் பொறிக்கப்பட்ட டோக்கன் களை வழங்குவார்கள். பொதுமக்கள் டோக்கனில் உள்ள வரிசை எண்ணிற்கு ஏற்றவாறு வரிசையில் நின்று சேவைகளைப் பெறவேண்டும். மேலும், இந்த ஆதார் உதவி அலுவலர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தி டோக்கன் எண்ணுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் வரிசையில் செல்வதை உறுதி செய்வார்கள். இதுமட்டுமன்றி ஆதார் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து உதவுவார்கள். புகார் கூறலாம் ஆதார் பதிவிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணமில்லா சேவையாகும். நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் ஆதார் உதவி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும், ஆதார் உதவி அலுவலர்களது பணிகளில் குறை ஏதும் இருப்பின் அதனை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911- தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments