ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் தமிழக அரசிதழில் ஜல்லிக்கட்டு சட்டம் வெளியிடப்பட்டது இனி ஜல்லிக்கட்டை நடத்துவது குற்றம் ஆகாது

ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் தமிழக அரசிதழில் ஜல்லிக்கட்டு சட்டம் வெளியிடப்பட்டது இனி ஜல்லிக்கட்டை நடத்துவது குற்றம் ஆகாது | தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து அந்தச் சட்டம், ஜனவரி 31-ந் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் சட்டத் துறை செயலாளர் (பொறுப்பு) பூவலிங்கம் வெளியிட்ட தமிழக அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- தற்போது தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், "விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 2017" என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 21-ந் தேதியில் இருந்தே (அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட தினம்) இது நடைமுறைக்கு வந்ததாக கருதப்பட வேண்டும். விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் 1960 என்ற மத்திய அரசின் சட்டத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின் மூலம், "ஜல்லிக்கட்டு என்பது, அரசு அறிவிக்கும் நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதத்துக்கு இடையே பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பின்பற்றும் நோக்கத்துடன் காளைகளை வைத்து நடத்தப்படும் நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு ஆகும். அதோடு மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகிய நிகழ்வுகளும் சேர்க்கப்படுகின்றன" என்ற வாக்கியங்கள் புகுத்தப்பட்டன. மேலும், "மாநில அரசு வகுத்தளிக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்திலும், உள்ளூர் மாடுகளின் இனத்தை பாதுகாப்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது குற்றம் ஆகாது" என்ற வாக்கியங்களும் புகுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வாக்கியங்கள் புகுத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட அவசர சட்டம், தமிழக சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது. பின்னர் அதற்கு ஜனவரி 31-ந் தேதியன்று ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து அதே தேதியில் அந்த சட்டம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments