வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து 20-ந்தேதி முதல், வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம் அடுத்த மாதம் உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது

வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து 20-ந்தேதி முதல், வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம் அடுத்த மாதம் உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது | வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம். அடுத்த மாதம் இந்த உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது. பணம் எடுக்க கட்டுப்பாடு கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் பணம் வைத்திருப்பவர்கள் பணத்தை எடுக்க கடுமையாக கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. இதேபோல் .டி.எம்.களிலும் பணம் எடுக்க உச்சவரம்பு விதிக்கப்பட்டது. சேமிப்பு கணக்கில் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டும் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டது. உச்சவரம்பு நீக்கம் இந்த நிலையில் சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கு நிர்ணயித்த உச்சவரம்பை 2 கட்டங்களாக நீக்குவதாக நேற்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலும் கலந்து கொண்டார். இதன்பின்பு நிருபர்களிடம் ஆர்.காந்தி கூறியதாவது:- பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது இதற்கான கட்டுப்பாடுகள் 2 நிலைகளாக நீக்கப்படுகிறது. இதுவரை சேமிப்பு கணக்கில் வாரத்துக்கு அதிக பட்சமாக ரூ.24 ஆயிரம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது, வருகிற 20-ந்தேதி முதல் ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. 2-வது நிலையில், மார்ச் 13-ந்தேதி முதல் இந்த உச்சவரம்பும் கூட முற்றிலுமாக நீக்கப்படுகிறது. அன்று முதல் பணத்தை திரும்பப் பெறுவதற்கு எவ்வித உச்சவரம்பும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். கள்ளநோட்டு சாத்தியமில்லை ரூ.500, ரூ.2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "இதுபற்றி எங்களுடைய கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவை கள்ள நோட்டுகள் அல்ல. எல்லாமே புகைப்பட பிரதிகள் ஆகும். இதுபோன்ற போலி நோட்டுகளை சாதாரண மக்களே அடையாளம் கண்டுபிடித்து விடமுடியும். தவிர, புதிய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் கள்ள நோட்டுகளை அச்சிடுவது சாத்தியமானது அல்ல" என்று குறிப்பிட்டார்.

Comments