-->

Wednesday, February 22, 2017

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் தகவல்.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல் | ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நேற்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் காமராஜ் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 1.11.16 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் குறிப்பிட்டவாறு, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு (மின்னணு குடும்ப அட்டை) வழங்க அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை, 5 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 672 பேர் (80 சதவீதம்) தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளனர். மீதமுள்ளவர்களின் ஆதார் விவரங்களை உடனடியாக பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்த 18 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற கள ஆய்வில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமை அன்று நடத்தப்படும் குறைதீர் முகாம்களில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 53 மனுக்கள் பெறப்பட்டு அதில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 781 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வகை முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில், ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்லாது கடத்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகும் நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரால் எடுக்கப்பட்டு வரும் கடுமையான தொடர் நடவடிக்கைகளால் இதுவரை 951 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு எடுத்துவரும், விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெளிச்சந்தையில் வெகுவாக குறைந்து வருகிறது என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கையை அலுவலர்கள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.