கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? 1 கோடி வங்கி கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரி இலாகா 18 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது

கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? 1 கோடி வங்கி கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரி இலாகா 18 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது | வங்கிகளில் கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக 1 கோடி வங்கி கணக்குகளை வருமானவரி இலாகா ஆய்வு செய்து உள்ளது. அதிக பணம் டெபாசிட் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய 50 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது. அப்போது ஏராளமானோர் தங்களது வங்கி கணக்குகளில் பல லட்ச ரூபாய் அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தனர். இதையடுத்து இப்படி அதிக அளவில் பழைய பணத்தை செலுத்தியவர்கள் அனைவரும் தங்களது வரி வளையத்துக்குள் வருகின்றனரா? என்பதை கடந்த மாதம் 31-ந்தேதி முதல் வருமான வரி இலாகா ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு 'பணத் தூய்மை இயக்கம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆய்வு தற்போது வருமான வரி இலாகா கணக்கின்படி 2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டில் 3.65 கோடி தனி நபர்களும், 7 லட்சம் கம்பெனிகளும், இந்து கூட்டு குடும்பத்தினர் 9.40 லட்சம் பேரும், 9.18 லட்சம் நிறுவனங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருக்கின்றனர். இது தவிர பூஜ்யநிலை ஜன்தன் வங்கிக் கணக்கில் 24 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்கள் அனைவருடைய வங்கிக் கணக்குகளையும் வருமான வரி இலாகா ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. தங்களிடம் உள்ள வருமானவரி கணக்கு தாக்கல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் செலுத்தப்பட்ட வங்கி கணக்குளை ஆய்வு செய்து வருகிறது. 1 கோடி வங்கி கணக்குகள் அதன்படி தொடக்க நிலையில் 1 கோடி வங்கி கணக்குகளை தங்களிடம் ஏற்கனவே உள்ள புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு வருமான வரி இலாகா ஆய்வு செய்தது. அவற்றில் 18 லட்சம் கணக்குகளில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்தது. இந்த பணம் டெபாசிட் செய்திருக்கும் விதம் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக வருமான வரி இலாகா கருதுகிறது. முந்தைய ஆண்டுகளில் இவர்கள் இவ்வளவு தொகையை தங்களுடைய வங்கி கணக்கில் இருப்பாக வைத்திருக்கவில்லை. தவிர முந்தைய ஆண்டுகளில் இவர்கள் செய்த வருமான வரி கணக்கு தாக்கலுடன் ஒப்பிட்டு பார்த்தால் டெபாசிட் செய்த தொகை வருமானத்துக்கு ஏற்ப பொருந்திப் போகவில்லை. இதுபற்றி வருமான வரி இலாகா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு கடந்த நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி முடிய சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் விதமாக வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்கள் என்று கருதப்படும் 18 லட்சம் பேருக்கு வருமான வரி இலாகா சார்பில் உரிய விளக்கம் கேட்டு எஸ்.எம்.எஸ். மற்றும் -மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்களை பற்றிய புள்ளி விவரங்களை எங்களிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இன்னும் விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். இவர்கள் அளிக்கும் பதில் திருப்திகரமாக இருந்தால், அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருமான வரி தொடர்பான சந்தேகங்கள் முடித்து வைக்கப்படும். அதே நேரம் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால், அவர்களுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்புவது பற்றிய முடிவை வருவாய் துறையின் துணை கமிஷனர் மற்றும் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். அதே நேரம் இந்த விஷயத்தில் வருமான வரி செலுத்துபவர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments