ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை | ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடி திருவிழா போன்ற விளையாட்டுகளை தமிழகத்தில் நடத்தும்விதமாக மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. பொதுநல வழக்குகள் மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:- பாரம்பரிய விளையாட்டு ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடி திருவிழா ஆகியவை கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுவரும் பாரம்பரிய, கலாசார விளையாட்டுகளாகும். இதுகுறித்து தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடி திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் மாடுகள் துப்புறுத்தப்படுவதில்லை. சித்ரவதை செய்யப்படுவதும் இல்லை. இந்த உண்மை தகவல்களை மறைத்து, பீட்டா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை உத்தரவை பெற்றுள்ளது. இதனால், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டுகள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஸ்பெயின் நாட்டில் மாடுகளை வைத்து விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டின் இறுதியில் பங்கேற்கும் மாடுகள் கொல்லப்படுகின்றன. ஆனால், அதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஒரு நாளும் நடந்தது இல்லை. சிறப்பு சட்டம் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ளதால், இந்த மண்ணில் பூர்வீக காளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இந்த கலாசார விளையாட்டுகளை நடத்த ஏதுவாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த 16-ந் தேதி மனு அளித்துள்ளேன். இதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடுபிடி திருவிழா நடத்த ஏதுவாக சிறப்பு சட்டத்தை இயற்றும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Comments