மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு | ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன்காரணமாக 2015-ம் ஆண்டு பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக மக்களின் எழுச்சி காரணமாக 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக மத்திய அரசு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனால் அந்த சுற்றறிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர் சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தியது. இதன் தீர்ப்பு கடந்த டிசம்பர் 7-ல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கக் கோரி தமிழக வழக்கறிஞர் குழுவினர் உச்ச நீதிமன்றத்தை சில நாட்களுக்கு முன்பு அணுகினர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அடங்கிய அமர்வு தீர்ப்பை உடனடியாக வழங்க முடியாது என்று கைவிரித்தது.
இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக மாநில அளவில் அவசர சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பால் அவசர சட்டத்துக்கு குறுக்கீடு ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நேரில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

Comments