அங்கீகாரம் இல்லாத மனைகள் பத்திரப் பதிவுக்கான தடை நீட்டிப்பு

அங்கீகாரம் இல்லாத மனைகள் பத்திரப் பதிவுக்கான தடை நீட்டிப்பு | விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றி பத்திரம் பதிய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய ஜனவரி 30-ம் தேதி வரை அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதித்து கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த அக்டோபர் 21-ல் விசாரணைக்கு வந்தபோது அக்.20-ல் பிறப்பிக் கப்பட்ட ஒரு அரசாணை நீதிபதிகளிடம் சமர்ப்பிக் கப்பட்டது. அதில், ''தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22--படி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அக்.20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட மனை களை மறு பத்திரப் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது அந்த அரசாணையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ''தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? அங்கீகாரமற்ற மனைகளை அரசு எவ்வாறு வரையறை செய்யப்போகிறது? என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் '' எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள் சிலர், உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையால் அடுக்குமாடி வீடுகளை விற்க முடியாமலும், நிலங்களை விற்க முடியாமலும் ரியல் எஸ்டேட் முடங்கியுள்ளதாகவும், சிலர் இறந்து வி்ட்டதாகவும் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், ''அந்த அடுக்குமாடி வீடுகள் அங்கீகாரம் பெற்ற மனையில் கட்டப்பட்டவையா?'' என்றனர். அதற்கு அந்த வழக்கறிஞர்கள் ''இல்லை'' என்றனர். அதற்கு நீதிபதிகள், ''நிலத்தை வாங்கும் போதே அதைச் சரிபார்த்து வாங்க வேண்டியது அவரவர்களின் கடமை. அதைச் செய்யாமல் இப்போது சிலர் இறந்துவிட்டனர் என குற்றம் சாட்டக்கூடாது. விளை நிலங்களில் வீட்டைக் கட்டினால் விவசாயம் என்ன ஆவது? நாளைக்கு உணவுக்கு என்ன செய்வீர்கள்? உங்களுக்காக சட்டத்தை வளைக்க வேண்டுமா?'' என கேள்விகளை எழுப்பினர். அப்போது மனுதாரரான யானை ராஜேந்திரன், ''இந்த தடையால் 2 முதல் 3 லட்சம் விவசாய விளை நிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது'' என்றார்.Comments