-->

Tuesday, January 31, 2017

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு விதித்த தடையை நீக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு விதித்த தடையை நீக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு | அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 'தமிழகத்தில் விவசாய நிலங்கள், சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயம் அழிவதுடன், விவசாய நிலங்களும் அழிந்து வருகிறது. இந்த வீட்டு மனைகளும் சட்டப்படி அமைக்கப்படுவதில்லை. எனவே, தமிழகத்தில் விவசாய நிலங்களை சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், விவசாய நிலங்களை சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யவும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யவும் தடைவிதித்து கடந்த செப்டம்பர் 9-ந் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவினால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தடையை நீக்கக்கோரி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், தனி நபர்கள் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதித்தும், அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த அரசாணையை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. 'தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களை அரசு எவ்வாறு வகைப்படுத்தப் போகிறது?, ஏராளமான விவசாய நிலங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை எவ்வாறு அரசு வரையறை செய்யப் போகிறது? அதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு உருவாக்கி, இந்த ஐகோர்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், 'தலைமை செயலாளர் வேறு சில முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை குறித்து முடிவினை எடுக்க காலஅவகாசம் வேண்டும்' என்று கோரிக்கையை விடுத்தார். அப்போது ஒரு வக்கீல் எழுந்து, 'அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கிய மனைகளை விற்பனை செய்ய முடியவில்லை. பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் இருந்து, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்காவது விலக்கு அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், 'தடை உத்தரவினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், சட்டத்தை பின்பற்றியிருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்காதே? இப்போது வீடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தால், மீண்டும் பழைய நிலை வந்துவிடும். அங்கீகாரம் இல்லாத மனை, வீடு என்று பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் விலக்கு அளிக்க முடியாது. ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் விதமாக ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு உருவாக்கட்டும்' என்று கூறினார். அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன் எழுந்து, 'ஒரு ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் உருவாக்கவேண்டும் என்றால், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் செலவு செய்யவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை அரசு வரைமுறை செய்தால், அதற்கு சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அரசு நிதி ஒதுக்கவேண்டும். இவ்வளவு பெரிய தொகையை அரசு எவ்வாறு திரட்டும். எனவே, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை விற்பனை செய்த பத்திரப்பதிவு அனைத்தையும் ரத்து செய்யவேண்டும். விவசாயம் செய்யப்படாமல் தரிசாக போடப்பட்டுள்ள விவசாய நிலங்களை எல்லாம் அரசு கையகப்படுத்தவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தேன். இதுவரை அதற்கு அரசு பதிலளிக்கவில்லை' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் இடைக்கால மனுவை பரிசீலிக்க வேண்டும் என்றும், பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பின்னர், 'இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை அகற்ற முடியாது' என்று உத்தரவிட்டனர்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.