ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து | ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வக்கீல் கூறி உள்ளார். இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வக்கீல் (அட்டார்னி ஜெனரல்) முகுல் ரோகத்கி அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநில அரசு புதிதாக சட்டம் இயற்றலாம். அப்படி சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூற முடியாது. மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறாததால், தமிழக அரசு இது குறித்த சட்டத்தை கொண்டு வரலாம்.
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றிய அவசர சட்டத்தை மாநில அரசு பிறப்பிக்கும் அதே வேளையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கருத்தில் கொண்டு காளைகளுக்கு தீங்கு இழைக்கப்பட்டால் அதற்குரிய தண்டனை அல்லது அபராதத்தை மாநில அரசு பரிந்துரைக்கலாம். வரையறைகள் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் முன்பு நான் ஆஜராகி இருக்கிறேன். இந்த விளையாட்டில் மிருகங்களுக்கு எதிரான கொடுமை எதுவும் கிடையாது. ஸ்பெயின் நாட்டில் காளைகளை கொல்வது போன்ற கொடூரம் எல்லாம் இங்கு கிடையாது. எனவே, சில வரையறைகளை வகுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments