விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கலாம் உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல மத்திய அரசு விளக்கம்

விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கலாம் உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல மத்திய அரசு விளக்கம் | ஓட்டல் மற்றும் உணவக கட்டணங்களுக்கு சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு அறிவிக்கை ஓட்டல் மற்றும் உணவகங்களில் நாம் சாப்பிடும் தொகைக்கு சேவை கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில், 'டிப்ஸ்'க்கு பதிலாக, உணவு கட்டணம் மீது 5 முதல் 20 சதவீதம்வரை சேவை கட்டணம் வசூலிப்பதாகவும், சேவை எப்படி இருந்தபோதிலும் அதை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன. கட்டாயம் அல்ல இதுகுறித்து இந்திய ஓட்டல்கள் சங்கத்திடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அச்சங்கம், 'சேவை கட்டணம் செலுத்துவது முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாடிக்கையாளருக்கு சேவையில் திருப்தி இல்லாவிட்டால், சேவை கட்டணத்தை ரத்து செய்ய சொல்லலாம்' என்று விளக்கம் அளித்தது. எனவே, சேவை கட்டணம் என்பது விருப்பத்தின் அடிப்படையிலானது என்றே கருதப்பட வேண்டும். ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு கட்டணம் மீதான சேவை கட்டணம் கட்டாயம் அல்ல. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கலாம். சேவையில் திருப்தி இல்லாவிட்டால், சேவை கட்டணத்தை ரத்து செய்யுமாறு அவர்கள் கூறலாம். எழுதி வைக்க வேண்டும் இந்த விளக்கத்தை உரிய இடத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் எழுதி வைக்கும்படி, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். 1986-ம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, வர்த்தக நடவடிக்கைகளில் நியாயமற்ற முறையையோ, ஏமாற்றும் வழிமுறையையோ பின்பற்றினால், அது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கையாகவே கருதப்படும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நுகர்வோர் அமைப்பில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Comments