ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு | ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்தவேண்டும்? என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்ற விதிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில், தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கி தமிழக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக கால்நடைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தனி நபர்களோ அல்லது ஒரு அமைப்போ குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பினால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்து முன் அனுமதியினை பெறவேண்டும். அந்த அனுமதி கேட்கும் மனுவில், காளைகளின் விவரங்கள், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள இருக்கும் மாடு பிடி வீரர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து இருக்கவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்யவேண்டும். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி விதிகளின் அடிப்படையில் நடைபெறுகிறதா? என்பதை மேற்பார்வையிட வருவாய், கால்நடை, போலீஸ், சுகாதாரம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை கலெக்டர் உருவாக்கவேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முன்பாக காளைகளுக்கு போதை பொருள், எரிச்சலூட்டும் வேறு ஏதாவது பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதா? அவற்றின் உடல்நிலை எந்த நிலையில் உள்ளது? நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கால்நடை டாக்டர் பரிசோதிக்கவேண்டும். ஜல்லிக்கட்டை திறந்த மைதானத்தில் நடத்தவேண்டும். 20 நிமிடங்கள் ஓய்வு அளித்த பின்னரே, காளைகளை மைதானத்துக்கு அனுப்பவேண்டும். மைதானத்துக்கு வருவதற்கு முன்பு அனைத்து காளைகளும், சராசரியான மன நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்யும் விதமாக, மைதானத்துக்கு அருகே வரிசையாக நிறுத்தி வைக்கவேண்டும். தண்ணீர், உணவு முறையாக வழங்கவேண்டும். அப்போது பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று காளைகள் உணர்ந்து கொள்ளும் விதமாக, அதன் அருகே காளைகளின் உரிமையாளர்கள் நிற்க வேண்டும்.
உடலில் காயம், எலும்பு முறிவு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. ஜல்லிக்கட்டு மைதானம் 50 சதுரமீட்டர் குறையாமல் இருக்கவேண்டும். இந்த இடத்துக்குள் தான் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவேண்டும். காளைகள் மைதானத்துக்குள் வரும் பாதையையும், வெளியேறும் பாதையையும் மறைத்து வீரர்கள் நிற்கக்கூடாது. வீரர்கள் காளைகளின் திமில்களை பிடித்துக் கொண்டு, 15 மீட்டர் தூரம் வரையில் அல்லது 30 நொடி வரையில் அல்லது 3 முறை காளைகள் துள்ளி குதிக்கும் வரையில் செல்லவேண்டும். மாட்டு வாலையோ, கொம்பையோ அல்லது கால்களையோ பிடித்து அவற்றை தடுத்து நிறுத்துக்கூடாது. ஒருவேளை, போட்டி நடக்கும் இடத்தில் இருந்து வெளியில் சென்ற காளைகள், மீண்டும் மைதானத்துக்குள் திரும்பி வந்தால், அதை வீரர்கள் யாரும் தொடக்கூடாது. இந்த விதிகளை மீறும் வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு முறையான (கேலரி) இருக்கை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். இதன் தரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவேண்டும். பார்வையாளர்கள் பகுதிகளுக்குள் காளைகள் துள்ளி குதித்து வந்து விடாமல் இருக்க குறைந்தது 8 அடி உயரத்தில் 2 அடுக்கு தடுப்புகளை உருவாக்கவேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்பு வீரர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்யவேண்டும். வீரர்கள் முறையான சீருடை, கலெக்டர் வழங்கிய அடையாள அட்டை உள்ளிட்டவைகளை அணிந்து இருக்கவேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி, தகுந்த எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ், டாக்டர்கள், முதல் உதவி குழுக்கள் நிறுத்தி வைத்திருக்கவேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடங்கியது முதல் முடியும் வரை அனைத்து சம்பவங்களையும் வீடியோ படம் பிடித்து வைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments