அமெரிக்க ஜனாதிபதியாக முதல் உத்தரவை பிறப்பித்தார், டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக முதல் உத்தரவை பிறப்பித்தார், டிரம்ப் | அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தனது முதல் உத்தரவை பிறப்பித்தார். அதில், ஒபாமா கேர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் நிதிச்சுமையை குறைக்க வேண்டும் என்று கூறி உள்ளார். பதவி ஏற்றார் டிரம்ப் வாஷிங்டன் நகரில், அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த கண்கவர் விழாவில், அமெரிக்க நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 70) நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருக்கு அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அவருக்கே உரித்தான பாணியில் அமைந்த அந்த உரையில், நாட்டின் பாதுகாப்பும், தேசியத்துவமும் வெளிப்பட்டது. இனி எல்லாம் அமெரிக்காதான் அப்போது அவர், "இந்த கணம் முதல், அமெரிக்காதான் முதலிடம். நாம் இரண்டு எளிமையான வழிகளை இனி பின்பற்றுவோம். அமெரிக்க பொருட்களை வாங்குவோம். அமெரிக்கர்களையே பணியில் அமர்த்துவோம்" என குறிப்பிட்டார். அமெரிக்காவில் தொழில்கள் பின்னடைவை சந்தித்ததற்கும், குற்றங்களின் எண்ணிக்கை பெருகியதற்கும் அவர் வாஷிங்டன் அரசியல்வாதிகள் மீது குற்றம் சாட்டினார். "தொழிற்சாலைகள் கைவிடப்பட்டதும், குற்றங்கள் அதிகரித்ததுமான இந்த அமெரிக்க படுகொலைகள் சரியாக இப்போது முடிவுக்கு வருகின்றன. இப்போதே அவை முடிவுக்கு வருகின்றன. வர்த்தகம், வரிகள், குடியுரிமை, வெளியுறவு என எல்லாமும் இனி அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க குடும்பங்கள் நலனுக்கு ஏற்ற வகையில்தான் அமையும்" என அவர் குறிப்பிட்டார். முதல் உத்தரவு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, ஒபாமா கேர் காப்பீட்டுத்திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் வெளிப்படுத்தினார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று, ஒபாமாவை சந்தித்தபிறகு, ஒபாமா கேர் திட்டம் தொடரும் என கூறினார். ஆனால் இப்போது அதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்று கையெழுத்திட்டு, பிறப்பித்த முதல் நிர்வாக உத்தரவு, ஒபாமா கேர் காப்பீட்டு திட்டத்துக்கு எதிரானதுதான். ஒபாமா கேர் திட்டத்தில் அமெரிக்க அரசுக்கு ஏற்படுகிற நிதிச்சுமைகளை குறைக்குமாறு அரசு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஒபாமாவின் கனவு திட்டம் ஒபாமாவின் கனவு திட்டம்தான், இந்த ஒபாமா கேர் காப்பீட்டுத்திட்டம். இந்த திட்டம், மலிவு கட்டணத்தில் சாமானிய மக்களும் சுகாதார காப்பீடு செய்து கொள்ள வழிவகுத்தது. இப்போது அதில் டிரம்ப் முதன்முதலாக கை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த அமெரிக்க ராணுவ மந்திரியாக ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி வகிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அவரது நியமனத்துக்கு ஏற்கனவே செனட் சபை ஒப்புதல் அளித்து விட்டது. இதன் காரணமாக அவருக்கு துணை ஜனாதிபதி பென்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உள்நாட்டுப்பாதுகாப்பு மந்திரியாக ஜான் கெல்லிக்கும் துணை ஜனாதிபதி பென்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இணையதளம் மாற்றியமைப்பு டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகையின் இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் ஒபாமாவின் கொள்கைகளுக்கு பதிலாக டிரம்பின் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப் நிர்வாகம் 6 விஷயங்களை முன்னுரிமை அளித்து பட்டியலிட்டுள்ளது. அவை, எரிசக்தி, வெளியுறவு கொள்கை, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி, ராணுவம், சட்ட அமலாக்கல், வர்த்தக உடன்படிக்கைகள் ஆகும். பருவநிலை மாற்றத்திலும் ஒபாமாவின் கொள்கையை மாற்றி அமைக்கப்போவதாக டிரம்ப் அளித்துள்ள உறுதியும் இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. எதிர்ப்பு போராட்டம் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதை அவருடைய ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடியபோது, எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். வர்த்தக நிறுவனங்களின் ஜன்னல்களை உடைத்து அவர்கள் துவம்சம் செய்தார்கள். முதலாளித்துவத்தை கைவிட வேண்டும் என்று முழங்கினார்கள். டிரம்புக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டார்கள். அவர்கள் மீது போலீசார் மிளகுத்தூள் வீசி கலைத்தனர். இந்த போராட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 6 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். ஒரு வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

Comments