தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’

தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் 'மாணவர் எழுச்சி'| தமிழகத்தில், 52 ஆண்டுகளுக்குப்பின், ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் மாணவர் கிளர்ச்சி ஏற்பட்டது எப்படி, என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவர் போராட்டத்தின் தீவிரத் தன்மையை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனதற்கு, சமூக வலைதளங்களே காரணம், என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மிருகவதையென கூக்குரல் எழுப்பிய, 'பீட்டா, உச்சநீதிமன்றத்தில் தடை பெற்று, இரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 'ஜல்லிக்கட்டுக்கான அனுமதி, இன்று கிடைத்துவிடும்; நாளை கிடைத்துவிடும்' என, காலத்தை 'ஓட்டி' மக்களை ஏமாற்றிய பா.ஜ.,வும், தமிழக அரசும், பொங்கல் நாளில் செய்வதறியாது திகைத்து நின்றன. 'ஜல்லிக்கட்டு தடைக்கு அ.தி.மு.க.,வே காரணம்' என, பட்டிமன்ற வாதத்தை மட்டுமே முன் வைத்த, தி.மு.க.,வும், பெயரளவுக்கே ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அடங்கிவிட்டது. இதனால், தமிழர்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கையை, வெற்றுக்கூச்சலாக கருதிவிட்டது, மத்திய அரசு. உளவுத்துறை தோல்வி: அரசியல் கட்சிகளின் செயலற்ற தன்மையைக் கண்டு, இவ்விவகாரத்தை கையில் எடுத்த மாணவர் படையினர், திடீரென சென்னை, மெரினா கடற்கரையில் திரண்டு போராட்ட நெருப்பை பற்ற வைத்தனர். தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை அங்குள்ள மாணவர்கள் கையில் எடுத்தபின், போராட்ட விசை எப்படி கூடியதோ, அதே போன்றதொரு தன்னெழுச்சியை காணமுடிந்தது. இப்படியொரு மாணவர் கிளர்ச்சியை, இந்தி திணிப்புக்கு எதிராக, 1965ல் கண்ட அனுபவம், தமிழகத்துக்கு உண்டு. மதுரை அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்காமல், இவ்வளவு நாட்களாக புகைந்து கொண்டிருந்த நெருப்பு சென்னைக்கு மட்டுமின்றி திருச்சி, மதுரை, சேலம், கோவை என, மாநிலம் முழுவதும் பரவத்துவங்கியது. 'மாணவர் போராட்டம், ஏதோ ஒரு நாள் கூத்து' என்பது போன்று, மிகச்சாதாரணமாக மதிப்பிட்டன, மத்திய, மாநில உளவுத்துறைகள். ஆனால், நடந்ததோ வேறு.'வாட்ஸ் ஆப், பேஸ் புக், டுவிட்டர்' என, சமூக வலைதளங்களில் அசுரவேகத்தில் விடுக்கப்பட்ட போராட்ட அறைகூவல்கள், கடலுக்கடியில் கிளம்பிய நிலநடுக்கம் போன்று, மெல்ல மெல்ல அசுர பலம் பெற்று மாணவர் கிளர்ச்சி என்ற சுனாமியாக மேல் எழுந்தன. அதன்பிறகே மத்திய, மாநில உளவுத்துறைகள் துாக்கம் கலைந்து, ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பின. மாநிலம் முழுவதும் போலீசாருக்கு உஷார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் எச்சரிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் அடுத்தகட்ட நகர்வு, திரளும் வழிமுறைகள், அவர்களின் அடுத்த திட்டம், எந்தெந்த மாவட்டங்களில் யார், யார் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்கள், அந்நபர்களின் பின்னணி என்ன, பின்னால் இருக்கும் இயக்கங்கள் எவை, எவை என, சகல விவரங்களை திரட்ட உளவுப்போலீசாருக்கு உத்தரவுகள் பறந்தன. ஜல்லிக்கட்டுக்கான மாணவர் கிளர்ச்சி, சமூக வலைதளங்களின் வாயிலாக தன்னெழுச்சியாக வெடித்த ஒன்று. தலைமை இல்லை; பல நாள் ஒருங்கிணைப்பு இல்லை; கோடி, கோடியாக நிதி இல்லை, என, போராட்டத்துக்கான அடிப்படை எவ்விதமான அடிப்படை முன்னேற்பாடுகள் இல்லாமல் தானாக மாணவர்களும், பெண்களும் திரண்டனர். இப்போராட்டத்தால், 'கடும் வயிற்றுப் போக்குக்கு' ஆளாகியிருக்கும் மத்திய, மாநில உளவுத்துறைகள், போராட்டக்காரர்களின் பின்னணி, காரண காரியங்களை ஆராய்ந்து தலைமை இடத்துக்கு, 'ரிப்போர்ட்' அனுப்பி வருகின்றன. அரசியல் தலைமையற்ற, ஒற்றைக் கோரிக்கை கொண்ட தங்களது போராட்டத்தை உளவுப் போலீசார் தவறாக மதிப்பிட்டிருப்பதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, சென்னையைச் சேர்ந்த தமிழினி ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 'கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மற்றும் மக்கள் மீது எவ்விதமான பலப்பிரயோகமும் செய்யக்கூடாது' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள், போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், போராட்டம் தீவிரமடையாமல் வலுவிழக்கச் செய்வதற்கான யோசனைகளும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. போராட்டக்களங்களில் திரண்டிருக்கும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஒரே பலம், சமூக வலைதளங்கள். இவற்றின் மூலமாகவே ஆதரவு திரட்டி வருகின்றனர். தங்களுக்கான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை, வெளியில் இருந்து வரவழைத்துக்கொள்கின்றனர்.
மக்களும், தன்னார்வலர்களும், போராட்டக்களங்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகளை செய்து வருகின்றனர். இவற்றைத் தடுத்தாலே, மாணவர் போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிடலாம் என்ற முடிவுடன் போலீசார், முதலில் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கச் செய்தனர். பின்னர், மாணவர் போராட்டக்களங்களின் அருகில், 'ஜாமர்' பொருத்தி, மொபைல் போன்களை செயலிழக்க செய்தனர். தவிர, தனியார் மொபைல்போன் ஆபரேட்டர்களின் உதவியை பெற்று, போராட்டக்காரர்களின் தகவல் தொடர்பை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பகுதிகள் மற்றும் கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று, மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதனால், 500 மீ.,க்கும் அதிக துாரம் வரை சென்று, அங்கிருந்தே, மொபைல் போன்களில் தொடர்பு கொள்ள முடிந்தது. கோவை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'நாங்கள் 'ஜாமர்' எதையும் பொருத்தவில்லை. ஒரே இடத்தில், பல ஆயிரம் பேர் திரண்டு மொபைல் போன்களை பயன்படுத்தியதால், 'நெட்வொர்க் ஜாம்' ஆகியிருக்கும்' என்றார். உணவு, மாற்று உடை, கழிப்பிடம் என, எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இரவு, பகலாக தொடர்ச்சியாக போராடி வரும் மாணவ, மாணவியர் தற்போது போலீசின் மறைமுக கெடுபிடிகளையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதே உண்மை.

Comments