மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?

மத்திய பட்ஜெட்  தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா? | பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 4-வது முறை ஆகும். இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது பொது பட்ஜெட்டின் ஒரு அங்கமாக ரெயில்வே பட்ஜெட் இருக்கும். பட்ஜெட் உரையின் போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிடுவார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்கும் வகையிலும் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 15 சதவீதமாக இருக்கும் சேவை வரி உயர்த்தப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். வேளாண்மை, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், நவீன உத்திகளுடன் புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான திட்டங்களையும் அருண் ஜெட்லி அறிவிப்பார் என்று கருதப்படுகிறது. நாட்டில் விலைவாசி அதிகரித்து இருப்பதால் தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வற்புறுத்தி வருகிறார்கள். எனவே தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பு தற்போதுள்ள ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல சூழ்நிலையை உருவாக்கவும், மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் அருண் ஜெட்லி வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்துவார் என்று கருதப்படுகிறது. வீட்டுக்கடனுக்காக தற்போது செலுத்தப்படும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை கழிவு உள்ளது. இந்த வட்டிக்கழிவு சலுகை ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும் மருத்துவ செலவுக்கான கழிவுத்தொகையும் உயர வாய்ப்பு இருக்கிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கிராமப்புற பொருளாதாத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள், பெண்கள் நலனுக்கான திட்டங்களும், கல்வி, சுகாதாரம் போன்ற சமூக துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments