ஜல்லிக்கட்டு தொடர்பான மனுக்கள் மீது 31-ந் தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான மனுக்கள் மீது 31-ந் தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு | ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் வருகிற 31-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. மத்திய அரசு அறிவிக்கை சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற முடிவு செய்தது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான 'கேவியட்' மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் போது தங்கள் கருத்தையும் கேட்டு அறியவேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பிலும் 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி, இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மத்திய அரசு முறையீடு இந்த சூழ்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து இருப்பதால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், இது தொடர்பான மனுவை தாக்கல் செய்வதாகவும், அதனை விரைந்து விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பாக இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அட்டார்னி ஜெனரலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஜி.எஸ்.மணி இதே அமர்வு முன்பு ஆஜராகி, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் வக்கீல் அஞ்சலி சர்மா தாக்கல் செய்து இருக்கும் மனு தொடர்பாக முறையீடு செய்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய இந்திய விலங்குகள் நல வாரியம் தனக்கு அனுமதி அளித்ததாக கூறி பொய்யான தகவல்களின் அடிப்படையில் அஞ்சலி சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் அனுமதி வழங்கவில்லை. எனவே இது நீதிமன்றத்துக்கு எதிராக மோசடி செய்யும் வகையில் அமைந்த குற்றம் ஆகும். ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அத்துடன், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் சரியானது என்றும், எனவே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் முறையீடு செய்தார். தான் தாக்கல் செய்யும் மனுவை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கினார்கள். மற்ற மனுக்களுடன் சேர்த்து அவரது மனுவும் 31-ந் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments