தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிய காற்றழுத்தம் தமிழகம், புதுவையில் ஜன.20 முதல் மழை

தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிய காற்றழுத்தம் தமிழகம், புதுவையில் ஜன.20 முதல் மழை | தாய்லாந்து அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதற்கு நேர்மாறாக 2016-ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்தன. கடந்த ஓராண்டில் பெய்த மழை அளவை பொருத்தவரை, இயல்பை விட 41 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த சில தினங்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நிருபர்களிடம்  கூறியதாவது: தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதனோடு தொடர்புடைய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, அடுத்த சில தினங்களில் மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்தை நோக்கி வரக்கூடும். இதன் காரணமாக வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு உட்பட்ட நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. முதலில் கடலோர மாவட்டங்களில் தொடங்கும் மழை, பின்னர் படிப்படியாக உள் மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும். இந்த மழை தமிழகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.Comments