10 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை புதிய தடுப்பூசி தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் பாதிப்பை தடுக்க தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

10 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை புதிய தடுப்பூசி தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் பாதிப்பை தடுக்க தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு | தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்க்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி மாதம் முழுவதும் நடக்கிறது. 10 மாதம் குழந்தை முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கும் புதிய தடுப்பூசி போடப்பட உள்ளது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார். இந்தியாவில் தட்டம்மை, ரூபல்லா என்ற ஒரு வகை அம்மை நோயால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை யடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி மத்திய சுகாதாரத்துறை நாடு முழுவதும் உள்ள 10 மாத குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர்கள் வரை அனைவருக்கும் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான புதிய தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தி தடுப்பூசிப் போடப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக மற்ற மாநிலங்களில் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களுக்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி மாதம் நடக்கிறது. பிப்ரவரியில் முகாம் இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது: தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்க்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி முதல் வாரம் தொடங்கி அந்த மாதம் முழுவதும் நடக்கிறது. 10 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் மற்றும் 5 வயது முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு பள்ளிக்கூடங்களி லும் புதிய தடுப்பூசி போடப்படும். இந்த முகாமில் மொத்தம் 2 கோடி குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் ஆகிய இரண்டுக்கும் ஒரே தடுப்பூசிதான் போடப்பட உள்ளது. முகாம் முடிந்த பிறகு, இந்த தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும். அதன்பின் குழந்தைகளுக்கு 10 மாதத்தில் ஒரு தடுப்பூசியும், 16-வது மாதத்தில் ஒரு தடுப்பூசியும் போடப்படும். ரூபல்லா அம்மை நோய் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த அம்மை நோயால் கர்ப்பிணிகள் பாதிக்கப் பட்டால் பிறக்கும் குழந்தைகள் காது கேட்காமலும், கண் புரை பாதிப்பாலும், இதய நோய்களுடன் பிறப்பதற்கு வாய்ப்புள்ளது. சிறு வயதிலேயே இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தள்ளிப்போனது போலியோ முகாம் தமிழகத்தில் ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் என 2 கட்டங்களாக நடைபெறும். இந்த முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும். இந்த ஆண்டு தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்க்கான தடுப்பூசி முகாம் பிப்ரவரி மாதம் முழுவதும் நடக்கிறது. எனவே போலியோ சொட்டு மருந்து முதல் கட்ட முகாம் மார்ச் 5-ம் தேதியும், இரண்டாம் கட்ட முகாம் ஏப்ரல் 2-ம் தேதியும் நடைபெற உள்ளது. இது தொடர்பாக டாக்டர் கே.குழந்தைசாமி கூறும்போது, "தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்க்கான தடுப்பூசி முகாம் பிப்ரவரி மாதம் நடப்பதால், போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. 2 கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமை ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்" என்றார்.Comments