சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன: கருப்பு பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது மத்திய அரசு கடும் எச்சரிக்கை

சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன: கருப்பு பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது மத்திய அரசு கடும் எச்சரிக்கை | கருப்பு பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது எனவும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சட்ட திருத்தம் கருப்பு பணம் பதுக்குதலை தடுக்கும் வகையில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி தடை செய்தது. இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள கருப்பு பண முதலைகள் பலரும், தாங்கள் இருப்பு வைத்திருக்கும் ஏராளமான கருப்பு பணத்தை பல்வேறு வழிகளில் மாற்ற முயற்சித்து வருகின்றனர். எனவே ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பின் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வரி விதிக்கும் வகையில் வரிவிதிப்பு சட்டதிருத்த மசோதா-2016- கடந்த 29-ந்தேதி பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம் கணக்கில் காட்டாமல் வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை, அரசு கண்டறிந்தால் அதற்கு 85 சதவீதம் வரை வரிவிதிக்க முடியும். சக்திகாந்த தாஸ் தகவல் இந்த சூழ்நிலையிலும் பலர் தங்கள் கருப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயல்வதும், நிதி மோசடி செயல்களில் ஈடுபடுவதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று தனது 'டுவிட்டர்' தளத்தில் கூறுகையில், 'நிதி மோசடியில் ஈடுபடுவர்கள், அதற்கு ஒத்துழைப்பவர்கள் மற்றும் கருப்பு பணத்தை மாற்ற முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தப்ப முடியாது' என்று தெரிவித்து உள்ளார். இது தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தொடங்கி விட்டதாக கூறியுள்ள சக்திகாந்த தாஸ், அதன் பலன்கள் வெளிவர தொடங்கி விட்டதாகவும், வருகிற நாட்களில் இது மேலும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.Comments